இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) தற்போதைய தலைவர் சோம்நாத் ஆக உள்ளார். இவரது பதவிக்காலம் முடிவுக்கு வருவதற்கான நிலையில், மத்திய அரசின் நியமனக்குழு இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணனை நியமனம் செய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன், திருவனந்தபுரத்தில் உள்ள எல்.பி.,எஸ்.சியின் இயக்குனராக பணியாற்றியுள்ளார். இவர் நாளை மறுநாள் இஸ்ரோவின் தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.வி. நாராயணன், தனது சொந்த மாவட்டமான கன்னியாகுமரியில் உள்ள சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதி கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்துள்ளார். சாமி தரிசனம் செய்த பிறகு, அவரிடம் செய்தியாளர்கள் கேள்விகள் எழுப்பினர், இஸ்ரோ தலைவர் வி . நாராயணன் பதிலளிக்கையில், “இந்திய விண்வெளி துறையை முன்னேற்றுவதற்கான பொறுப்பை பிரதமர் மோடி என் மீது நம்பிக்கை வைத்து வழங்கியுள்ளார். இறைவனின் அருளும், பெரியவர்களின் ஆசியும் இந்த பதவியை எனக்கு வழங்கியுள்ளது. இந்த பொறுப்பை இந்திய விண்வெளி துறையின் கூட்டுறவின் மூலம் சிறப்பாக நிறைவேற்றுவேன். பொறுப்பை ஏற்ற பிறகு, இஸ்ரோவின் அடுத்த நடவடிக்கைகள் குறித்து உங்களுக்கு தகவல் தருவேன்” எனக் கூறினார்.

