வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணால் உருவாக்கப்பட்ட நட்சத்திர அணிகலன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் பகுதியில் இரண்டு கட்ட அகழாய்வு பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது 3ம் கட்ட ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அகழாய்வில் பல்வேறு அரிய பொருட்கள் கிடைத்துள்ளன, இது வெம்பக்கோட்டையில் வணிகம் நடைபெற்றதற்கான சான்றாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், இன்று சுடுமண்ணால் செய்யப்பட்ட நட்சத்திர அணிகலன்கள் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். வெம்பக்கோட்டை 3ம் கட்ட அகழாய்வுத் தளத்தில் 1.90 மீட்டர் ஆழத்தில், சுடுமண்ணால் செய்யப்பட்ட நட்சத்திர அணிகலன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, இது பல தொல்பொருள்களை தன்னுள் கொண்டுள்ளது. 1.8 மி.மீ சுற்றளவிலும், 0.6 மி.மீ கணமும், 3.4 கிராம் எடையும் கொண்ட இந்த அணிகலன், அதன் இணையோடு கிடைத்திருப்பது கூடுதல் சிறப்பாகும். மேலும், பழந்தமிழர் பொக்கிஷங்களை தொல்லியல் துறை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

