உலகிற்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக, கார்பன் டை ஆக்சைடின் அளவு இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளதாக உலக வானிலை மையம் அதிர்ச்சியூட்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பூமியில் வாழும் உயிர்கள் அனைத்துக்கும் தீவிர எச்சரிக்கை மணி ஒலிக்கும் அளவுக்கு உலகிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக கார்பன் டை ஆக்சைடின் அளவு இதுவரை இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. உலக வானிலை மையத்தின் (WMO) சமீபத்திய கிரீன்ஹவுஸ் கேஸ் புல்லட்டின் அறிக்கையின்படி, 2024ஆம் ஆண்டில் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடின் (CO₂) அளவு இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
2004ஆம் ஆண்டு வெளியான முதல் புல்லட்டின் அறிக்கையில், வருடாந்திர கார்பன் டை ஆக்சைடின் அளவு ஒரு மில்லியன் துகள்களில் 377.1 பாகங்கள் (ppm) இருந்தது. ஆனால் 2024இல் இது 423.9 ஆக உயர்ந்துள்ளது. பூமியின் வெப்பநிலை மேலும் வேகமாக உயரும் அபாயத்தை இது சுட்டிக் காட்டுகிறது.
உலக வானிலை மையத்தின் (WMO) அறிக்கையில், மனிதர்கள் வெளியேற்றும் கார்பன் டை ஆக்சைடு, அதிகரித்துவரும் காட்டுத் தீ, நிலப்பரப்பு மற்றும் பெருங்கடல்கள் வழியாக கார்பன் டை ஆக்சைடு உறிஞ்சுதலில் ஏற்பட்ட குறைவு ஆகியவை இந்த ஆபத்தான வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.
1960-களில் இருந்து கார்பன் டை ஆக்சைடு அளவு மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. 2011 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 0.8 ppm உயர்ந்தது. ஆனால், தற்போது ஆண்டுக்கு 2.4 ppm என்கிற அளவில் உயர்வைக் கண்டுள்ளது. குறிப்பாக, 2023 முதல் 2024 வரை 3.5 ppm என்கிற அதிர்ச்சியூட்டும் அளவுக்கு உயர்வடைந்துள்ளது, இது 1957இல் நவீன அளவீடுகள் தொடங்கியதில் இருந்து மிகப்பெரிய வளர்ச்சி என உலக வானிலை மையம் கூறுகிறது. இதைப்போன்று, மனித நடவடிக்கைகளுடன் நேரடியாக தொடர்புடைய மற்ற இரண்டு முக்கிய பசுமை இல்லா வாயுக்களான மீத்தேன் (CH₄) மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு (N₂O) ஆகியவையும் புதிய உச்சத்தை எட்டியுள்ளன.
உலக வானிலை மையத்தின் துணைப் பொதுச் செயலாளரான கோ பாரெட் இது குறித்து கூறுகையில், “காற்றில் அதிகமாக இருக்கும் கார்பன் டை ஆக்சைடு மற்றும் பிற வாயுக்கள் வெப்பத்தை வெளியே போகாமல் அடைத்து வைக்கின்றன. இதனால் பூமி இன்னும் சூடாகி, மழை, வெப்பம், புயல் போன்ற வானிலை மாற்றங்கள் மேலும் தீவிரமாகி மோசமடைந்து வருகின்றன. எனவே, இந்த மாசு நிறைந்த வாயுக்களை குறைப்பது சுற்றுச்சூழலுக்காக மட்டுமல்ல, நம்முடைய வாழ்வாதாரம், பொருளாதாரம் மற்றும் நலன்களுக்கும் மிக அவசியம்” என்றார்.
இந்த அதிர்ச்சியூட்டும் தரவுகள், காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் உலகளாவிய முயற்சிகள் இன்னும் போதுமான அளவில் பலனளிக்கவில்லை என்பதை தெளிவாகக் காட்டுகின்றன. இது நம்முடைய தலைமுறைக்கு மட்டும் அல்ல, வருங்காலத்திலும் மிகப்பெரிய பிரச்சனையாக மாறக்கூடிய அபாயம் உள்ளது என்பதால், இதை சமாளிக்க உடனடி நடவடிக்கை அவசியமாகிறது.

