திருவண்ணாமலையில் உலகப்புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் பிரசிதி பெற்றதாகும்.
இதனிடையே, அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் சிகர நிகழ்வான மகா தீபதிருவிழா நாளை நடைபெற உள்ளது.
இந்நிலையில், கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, பக்தர்கள் நாளை மலையேறவும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், திருவண்ணாமலைக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், நாளை தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதுபோல சேலம், நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று, திருவள்ளூர் மாவட்டத்துக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் வேலூர்,திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுச்சேரியில் இன்று கனமழை பெய்வதற்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
நாளை திருவண்ணாமலைக்கு மழைக்கான எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

