அமெரிக்கா – இரான் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், ஹோர்மூஸ் நீரிணை மீண்டும் உலக கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , ஹோர்மூஸ் வழியாக செல்லும் இரானிய துறைமுகங்களுக்கான கடற்படை கண்காணிப்பை அதிகரிக்க உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீரென உயர்ந்து, ஒரு பேரலுக்கு 100 டாலரைத் தாண்டியது. இதனால் உலகளவில் எரிபொருள் விலை உயர்வு, போக்குவரத்து செலவு அதிகரிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமின்மை அதிகரித்துள்ளது. இந்தியாவுக்கு இது பெரிய சவாலாக மாறக்கூடும். காரணம், இந்தியா தனது எண்ணெய் தேவையின் பெரும்பகுதியை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. அதில் முக்கியமான பகுதி ஹோர்மூஸ் நீரிணை வழியாகவே வருகிறது. உலகின் முக்கிய எண்ணெய் கடல்வழிப் பாதைகளில் ஒன்றான இந்த நீரிணை, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. எண்ணெய் மட்டும் அல்லாமல், எல்பிஜி மற்றும் எல்என்ஜி போன்ற எரிவாயு இறக்குமதியும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, வளைகுடா நாடுகளிலிருந்து வரும் எரிவாயு சப்ளையில் தடங்கல் ஏற்பட்டால், வீட்டு பயன்பாடு, தொழிற்சாலைகள் மற்றும் போக்குவரத்து துறைகள் பாதிக்கப்படலாம். இதன் தாக்கம் உரத் துறையிலும் இருக்கும்.
யூரியா, அம்மோனியா போன்ற உரங்களுக்கான மூலப்பொருட்கள் பெரும்பாலும் வளைகுடா வழியே வருவதால், சப்ளை குறைந்தால் விவசாயம் பாதிக்கப்படலாம். விதைப்பு காலம் நெருங்கும் நிலையில், இது விவசாயிகளுக்கு கூடுதல் சுமையாக இருக்கும். மருந்துத் துறையும் பாதிப்பை சந்திக்கலாம். இந்தியா உலகின் முக்கிய மருந்து உற்பத்தியாளர் நாடாக இருப்பதால், மூலப்பொருள் விலை உயர்வு மற்றும் போக்குவரத்து தாமதம் ஏற்பட்டால், மருந்து உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சிக்கலாகும். பொருளாதார ரீதியாகவும் இது இந்தியாவுக்கு அழுத்தம் தரும். எண்ணெய் விலை உயர்ந்தால், பெட்ரோல் – டீசல் விலை உயரும். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும். பணவீக்கம், வர்த்தக பற்றாக்குறை மற்றும் ரூபாய் மதிப்பு குறைதல் போன்ற சிக்கல்கள் உருவாகலாம். ஆனால், இந்தியா கடந்த சில ஆண்டுகளில் பல நாடுகளிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் வகையில் தனது வலையமைப்பை விரிவுபடுத்தியுள்ளது. அதனால் உடனடி பெரிய பாதிப்பு குறையலாம். இருந்தாலும், ஹோர்மூஸ் நீரிணை பிரச்னை நீண்ட காலம் நீண்டால், இந்திய பொருளாதாரத்துக்கு சவால்கள் அதிகரிக்கும். மொத்தத்தில், ஹோர்மூஸ் நீரிணை நெருக்கடி இந்தியாவில் எரிபொருள் விலை முதல் விவசாயம், மருந்து, போக்குவரத்து வரை பல துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய பிரச்னையாக பார்க்கப்படுகிறது. தற்போதைய சூழ்நிலை எப்படி மாறுகிறது என்பதே அடுத்த கட்ட பாதிப்பை தீர்மானிக்கும்.

