முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. ஆண்டின் 4வது மற்றும் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் கார்லோஸ் அல்கராஸ் (ஸ்பெயின்), சாதனை வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி), டானில் மெத்வதேவ் (ரஷ்யா) பெலிக்ஸ் ஆகர் அலியஸ்ஸிமி (கனடா) உள்பட உலகின் டாப் வீரர்கள் பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகின்றனர். வலது முழங்கால் மூட்டு காயத்தால் அவதிப்பட்டு வரும் இத்தாலி நட்சத்திரம் யானிக் சின்னர் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மகளிர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும் நம்பர் 1 வீராங்கனையுமான அரினா சபலெங்கா (பெலாரஸ்), எலனா ரைபாகினா (கஜகஸ்தான்), ஜெஸ்ஸிகா பெகுலா (அமெரிக்கா), கோகோ காஃப் (அமெரிக்கா), மிர்ரா ஆண்ட்ரீவா (ரஷ்யா), இகா ஸ்வியாடெக் (போலந்து), செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா, கரோலினா முச்சோவா, ஜப்பான் நட்சத்திரம் நவோமி ஒசாகா உள்பட முன்னணி வீராங்கனைகள் கோப்பையை கைப்பற்ற வரிந்துகட்டுகின்றனர்.மகளிர் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் சாதனை சகோதரிகள் வீனஸ் வில்லியம்ஸ் – செரீனா வில்லியம்ஸ் வைல்டு கார்டு சிறப்பு அனுமதியுடன் களமிறங்குவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

