சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் பணிகள் தீவிரமாக முன்னேறி வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ், பூந்தமல்லி புறவழிச் சாலையிலிருந்து வடபழனி வரை 15 கிலோமீட்டர் நீளத்தில் ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. குறிப்பாக, ஆற்காடு சாலைப் பகுதியில் சுரங்கப் பாதை அமைப்பதற்கான திட்டங்களை மெட்ரோ ரயில் நிர்வாகம் வகுத்துள்ளது. இதற்கான நிதி சுமை ரூ 5000 கோடியை மீறும் என்பதால், வடபழனி முதல் போரூர் வரை உள்ள 4 கிலோமீட்டர் தொலைவுக்கு ஒரே தூணில் நான்கு ரயில்கள் இயக்கப்படுவதற்காக, ரயில்கள் இடமாற்றம் செய்யும் வசதியுடன் ஒரு லூப் லைனும் சேர்க்கப்பட்டு, 5 தண்டவாளங்கள் இரட்டை அடுக்குகளாக அமைக்கப்படுகின்றன. இதற்கான ரயில் நிலையங்களும் உருவாக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த கட்டமைப்பின் எடையை தாங்குவதற்காக, 75 மீட்டர் நீளமுள்ள தூண்கள் பூமியில் புதைக்கப்பட்டு அமைக்கப்படுகின்றன. வழித்தடம் 4 மற்றும் 5 சந்திக்கும் இடமாக அமைக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில், கீழே 4வது வழித்தடத்திற்கான இரண்டு தண்டவாளங்கள் மற்றும் மேலே 5வது வழித்தடத்திற்கான இரண்டு தண்டவாளங்கள் அமைக்கப்படுகின்றன. இதில் குறிப்பிடத்தக்கது, ஒரு மெட்ரோ ரயில் மேல் இன்னொரு மெட்ரோ ரயில் செல்லும் அமைப்பு, இது உலகளவில் முதன்முறையாக சென்னையில் உருவாக்கப்படுகிறது. மேலும், ஆற்காடு ரோடில் 4 கி.மீ-க்கு 4 ரயில் நிலையங்கள் உள்ள நீளமான பாதை அமைக்கப்படுவதால், இது மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.

