லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் நாள் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மிஷ்கின், சஞ்சய் தத் இருவரும் வில்லன்களாக நடிப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின.
லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ விஜய் குரலில் வெளியாகி சமூக வலைதளங்களில் இன்றளவும் டிரெண்டிங்கில் இருக்கிறது. இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.400 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.
முதலில் லியோ படத்தின் இசைவெளியீட்டு விழாவானது செப்டம்பர் மாதத்தில் மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. பின்னர் துபாய் மற்றும் மலேசியாவில் லியோ படத்துக்கான நிகழ்ச்சிகள் பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செப்டம்பர் – 30 ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் அதற்கான பணிகளில் தயாரிப்பு நிறுவனம் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.