இந்தியாவின் கிரிக்கெட் திருவிழா என்றழைக்கப்படும் ஐபிஎல் தொடர், வரும் மார்ச் 22 முதல் மே 25 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டிகளுக்கான புதிய விதிமுறைகள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (பிசிசிஐ) அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த அறிவிப்பில், வீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் தொடரில் இந்திய அணியின் செயல்பாடுகளைத் தொடர்ந்து இந்திய வீரர்களுக்கு சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. அந்த விதிமுறைகளின்படி, அணி பேருந்தில் தனிப்பட்ட மேலாளர்கள் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், சுற்றுப்பயணங்களின் போது வீரர்களின் குடும்பத்தினருக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
தற்போது இந்த விதிமுறைகள் ஐபிஎல் அணிகளுக்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி, வீரர்கள் பயிற்சிக்கு வரும்போது அணி பேருந்தைப் பயன்படுத்துமாறும், அணிகள் இரண்டு தனித்தனி குழுக்களாகப் பயிற்சி செய்ய அனுமதிக்கப்படுவதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
மேலும், பயிற்சி மற்றும் போட்டிகள் நடைபெறும் நாட்களில் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களை தவிர, வீரர்களின் குடும்பத்தினர் அணியின் டிரஸ்ஸிங் ரூமுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது. வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் தனி வாகனத்தில் வந்து விருந்தினர் பகுதியில் இருந்து பயிற்சியைப் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நீட்டிக்கப்பட்ட துணை ஊழியர்களின் (நிபுணர்கள்/நெட் பவுலர்கள்) பட்டியலை பிசிசிஐயிடம் அணிகள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு, போட்டி இல்லாத நாட்களில் அவர்களுக்கு அனுமதி அட்டைகள் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
மைதானத்திற்குள் அங்கீகார அட்டை கொண்டு வராத வீரர்கள் மற்றும் போட்டிகள் முடிந்த பிறகு நடக்கும் போஸ்ட் மேட்ச் பிரசண்டேஷன்களில், பயிற்சி ஆடைகளை அணியும் வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. முதல் முறை எச்சரிக்கை கொடுக்கப்படும் என்றும், இரண்டாவது முறை அணிக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
