110 ஆண்டுகள் மழை புயல் என அனைத்தையும் எதிர்கொண்டு ரயில் சேவை வழங்கிய பாம்பன் பழைய ரயில் தூக்கு பாலத்தினை அகற்ற இந்திய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலில் ஆங்கிலேயர்களால் 1914ஆம் ஆண்டு தூக்கு பாலத்துடன் கூடிய ரயில் பாலமானது அமைக்கப்பட்டது. இப்பாலம் 110 ஆண்டுகளுக்கு மேல் கடந்து ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள், மீனவர்கள், உள்ளூர் மக்கள் என அனைவருக்கும் ரயில் போக்குவரத்து வழங்கி ராமேஸ்வரம் தீவை தமிழகத்தின் நிலப்பரப்புடன் இணைத்து முக்கிய பங்காற்றி வந்தது.
இந்தியாவில் கடல் மீது அமைந்த முதல் பாலம் என்னும் சிறப்பைப் பெற்ற இப்பாலம் 2022ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி அன்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு ரயில் போக்குவரத்து மண்டபத்துடன் நிறுத்தப்பட்டது. இதையடுத்து பாம்பன் பாலத்தினை கடந்து ராமேஸ்வரம் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இதில் 2019ஆம் ஆண்டிலிருந்து பழைய ரயில் பாலம் அருகில் ரூ.550 கோடி செலவில் செங்குத்து தூக்கு பாலத்துடன் கூடிய புதிய பாம்பன் பாலம் கட்டப்பட்டு கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி திறந்து ரயில் போக்குவரத்து துவங்கி ராமேஸ்வரம் வரை நடைபெற்று வருகிறது.
பழைய தூக்குபாலம் உறுதித்தன்மை இழந்ததால் பாம்பன் கால்வாய் வழியாகக் கப்பல்கள் கடந்து செல்லும் போது அதனை தூக்கி இயக்க முடியாததால் அதனை அகற்ற முடிவு செய்தது. ஆனால் ராமேஸ்வரம் தீவு மக்கள் இதனை நினைவு சின்னமாக வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், புயல் மற்றும் மழைக்காலங்களில் ரயில் சேவையைத் தொடர்ந்து வழங்கி வந்த ஆங்கிலேயர்கள் அமைத்த பழைய பாலத்தை அகற்ற ரயில்வே நிர்வாக முடிவு செய்து 2.81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் கோரி உள்ளது.
பழைய பாலத்தை நான்கு மாதங்களுக்குள் அகற்ற வேண்டும் எனவும் அந்த டெண்டரில் கூறப்பட்டுள்ளது. டெண்டர் விடுத்த பின் நான்கு மாதங்களில் இருந்த இடம் தெரியாமல் அகற்ற உள்ளனர்.

