இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது.
தொடக்க வீரர்களாக இமாம் உல் ஹக் மற்றும் பாபர் ஆசம் ஆகியோர் களம் இறங்கினர். இமாம் உல் ஹக் 10 ரன்களில் ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து பாபர் ஆசம் 23 ரன்னில் வெளியேறினர். இதன்பின்னர் இணைந்த சவுத் சகீல் மற்றும் கேப்டன் முகமது ரிஸ்வான் ஆகியோர் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்கள் சேர்த்தனர்.
இதனால் ஸ்கோர் மெதுவாக உயரத் தொடங்கியது. இருவரும் 3 ஆவது விக்கெட்டிற்கு 104 ரன்கள் எடுத்தனர். ரிஸ்வான் 46 ரன்னில் ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து சவுத் சகீல் 62 ரன்னில் வெளியேறினார்.
சல்மான் அக 19 ரன்களும், தயப் தாகிர் 4 ரன்களும் எடுக்க குஷ்தில் ஷா 38 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி 241 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 42.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 244 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பொறுப்பாக விளையாடிய இந்திய அணியின் பேட்ஸ்மேன் விராட் கோலி 111 பந்துகளில் 7 பவுண்டரியுடன் சதம் அடித்து அசத்தினார்.
ஷ்ரேயாஸ் ஐயர் 56 ரன்களும், சுப்மன் கில் 46 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் 4 புள்ளிகள் மற்றும் +0.647 நெட் ரன்ரேட்டுடன் முதலிடத்தில் உள்ளது.
