நிலவின் தென் துருவத்தில் பிரக்யான் ரோவர் ஆய்வு பணிகளை தொடங்கியது; அடுத்த 14 நாட்களுக்கு செயல்பாட்டில் இருக்கும்

அரசியல் அறிவியல் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

நிலவின் தென் துருவத்தில் பிரக்யான் ரோவர் ஆய்வு பணிகளை தொடங்கியது. நிலவின் தென் துருவத்தில் நேற்று தரையிறக்கப்பட்ட விக்ரம் லேண்டரில் இருந்து வெளியில் கொண்டுவரப்பட்ட பிரக்யான் ரோவர் தனது பணிகளை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
சந்திரயான் – 3 திட்டத்தின் வெற்றி மூலம் நிலவின் தென் துருவத்தில் கால்பதித்த முதல் நாடாக இந்தியாவை உலக அரங்கில் நிலைநிறுத்தியுள்ளனர் இஸ்ரோ விஞ்ஞானிகள். விக்ரம் லேண்டரை நேற்று (ஆகஸ்ட் 23) சரியாக 6.04 மணிக்கு தரையிறக்கினர். நிலாவின் தென் துருவப்பகுதியில் 70 டிகிரி அட்சரேகையில் லேண்டர் தரையிறங்கியதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து, சுமார் 2 மணி நேரம் கழித்து லேண்டருக்கும் இஸ்ரோவிற்கும் தொலைத் தொடர்பு ஏற்பட்டது. நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்கிய லேண்டர் எடுத்த புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டது.
தரையிறங்கிய இடத்தில் புழுதி அடங்கிய பின்பு லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் இரவு 11 மணிக்கு மேல் வெளியில் வந்தது. வெளியில் வந்த ரோவர் நல்ல நிலையில் உள்ளதாகவும் விரைவில் பணிகளை தொடங்கும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். ரோவரின் கருவிகளை சோதனை மேற்கொள்ளப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்று இஸ்ரோ அறிவித்தது போல், ரோவர் நிலவில் ஆய்வு பணிகளை தற்போது தொடங்கியுள்ளது.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட இஸ்ரோ, ரோவர் நல்ல நிலையில் உள்ளதாகவும், திட்டமிட்டப்படி பணிகளை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளனர். ரோவரில் பொருத்தப்பட்டுள்ள Lander Module payloads ILSA, RAMBHA மற்றும் ChaSTE என்ற 3 கருவிகளை இயக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுவட்டப் பாதையில் உள்ள உந்துவிசையின் SHAPE payload என்ற கருவி கடந்த ஞாயிற்றுக்கிழமை இயக்கப்பட்டதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவின் ஆய்வு பணிகளை 14 நாட்களுக்கு மேற்கொள்ளும். 6 சக்கரங்கள் கொண்ட இந்த பிரக்யான் ரோவர், ஒவ்வொரு நாளும் சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு நிலவின் பரப்பில் ஊர்ந்து செல்லும். பிரக்யான் ரோவரின் முக்கியப் பணி, நிலவின் மேற்பரப்பைப் பற்றியும், அதிலுள்ள கனிம வளங்கள் குறித்து ஆய்வு செய்வதுமே ஆகும். அதன்படி, முதல் ஆய்வாக, ரோவரில் இருந்து நிலவின் பரப்பில் லேசர் ஒளிக்கற்றை செலுத்தப்பட்டு மணல் மற்றும் பாறைகளில் உள்ள ரசாயன கலவையை ஆய்வு செய்யும்.
நிலவின் பாறைகளை மூடியுள்ள ரொகோலித் என்ற மணற்பரப்பை உருக்கி அதிலிருந்து வெளியேறும் வாயுக்களையும் ரோவர் ஆய்வு செய்யவுள்ளது. இதே போன்று, நிலவின் மேற்பரப்பில் உள்ள கனிம பொருட்களின் கலவை குறித்த பகுப்பாய்வையும் ரோவர் மேற்கொள்ளும். அதாவது, alpha பார்ட்டிகிள் எக்ஸ்-ரே ஸ்பெக்டோமீட்டர் என்ற கருவி மூலம் மக்னீசியம், சிலிக்கான், பொட்டாசியம், கால்சியம், இரும்பு, டைட்டானியம் உள்ளிட்ட தனிமங்கள் உள்ளதா என்பதை கண்டறிய ஆய்வு நடைபெறும்.
மேலும், நிலவின் வளிமண்டலம், இரவு – பகல் மாறுபாடுகள் குறித்த ஆய்வையும் ரோவர் மேற்கொள்ளவுள்ளது. இதே போன்று, I.L.S.A. என்ற கருவி மூலம் நிலவில் பூமியைப் போன்று நில அதிர்வுகள் ஏற்படுமா என்ற முக்கிய ஆய்வையும் ரோவர் நடத்தவுள்ளது. ரோவரில் பொறுத்தப்பட்டுள்ள 3டி கேமரா மூலம், நிலவில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நகர்வும் புகைப்படம் எடுக்கப்படும்.
ரோவரில் இருந்து பெறும் தகவல்களை விக்ரம் லேண்டர், பெங்களூருவில் உள்ள இஸ்ரோ ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கும். சூரிய சக்தியைக் கொண்டு இயங்கும் பிரக்யான் ரோவர், நிலவில் சூரிய ஒளி கிடைக்கும் 14 நாட்களும் ஆய்வு மேற்கொண்டு தனது பணியை நிறைவு செய்யும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *