சென்னை மெட்ரோ ரயில் (CMRL – Chennai Metro Rail Limited) சேவையை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் அதிகரிப்பை கண்டுள்ளது.
கடந்த மாதம் மட்டும் ஏறக்குறைய ஒரு கோடி நபர்கள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்து உள்ளனர். இந்த எண்ணிக்கையானது CMRL சேவைகள் தொடங்கியதில் இருந்து அதிகபட்சமானது என சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கியதிலிருந்து பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச சாதனை எண்ணிக்கையாக ஆகஸ்ட் 1, 2024 முதல் ஆகஸ்ட் 31, 2024 வரை மொத்தம் 95,43,625 பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களை பயன்படுத்தி பயணம் செய்துள்ளனர். ஜூலை 2024 உடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கையானது 8,606 பயணிகள் அதிகமாக பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் சென்னை மெட்ரோவை பயன்படுத்தி பயணம் செய்த பயணிகளின் அதிகபட்ச எண்ணிக்கை ஆகஸ்ட் 14, 2024 அன்று பதிவாகியுள்ளது. இந்த நாளில் சுமார் 3,69,547 பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்து உள்ளனர். சென்னை நகர மக்களுக்கு பாதுகாப்பான, திறமையான மற்றும் நம்பகமான பயணத்தை வழங்க CMRL எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது.