உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இதில், அரையிறுதிக்கான 4ஆவது அணிக்கான போட்டியில் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றன. இதில், தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் தோல்வி அடையவே அரையிறுதி வாய்ப்பை இழந்து உலகக் கோப்பை தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறியது.
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 44ஆவது லீக் போட்டி தற்போது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வருகிறது.
இதில், டாஸ் வென்று முதலில் விளையாடிய இங்கிலாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் குவித்தது. இதையடுத்து பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமானால், 6.4 ஓவர்களில் 337 ரன்களை சேஸ் செய்ய வேண்டும் என்று இருந்தது. ஆனால், பாகிஸ்தான் முதல் ஓவரிலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பிறகு நிதானமாக விளையாடத் தொடங்கியது. பாகிஸ்தான் 6.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 30 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது. அதோடு பாகிஸ்தான் கடைசி அணியாக உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது. இதன் காரணமாக நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து அணி விளையாடிய 9 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியதைத் தொடர்ந்து வரும் 15 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது. இதற்கு முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில், இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து வெளியேறியது.

