சமீபத்தில் இளவயதினரின் செல்பி மோகத்தால் தண்டவாளத்தில் இரயிலுடன் செல்பி எடுக்க முயன்று பல விபத்துகள் நடந்தேறியுள்ளன. இதனையடுத்து தெற்கு இரயிவேகோட்டம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்படுவதாவது: கடந்த 2021 – 22ம் நிதி ஆண்டில் விதிகளை மீறி, ரயில் பாதையை கடந்து சென்ற 1,411 பேர் மற்றும் ரயில் படிக்கட்டில் தொங்கியப்படி பயணித்த 767 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் புறநகர் மின்சார ரயில்களில் இருந்து கீழே விழுந்து, இறந்தோரின் எண்ணிக்கை 200ஐத் தாண்டுகிறது.
ரயில்வே விதிகள், 156வது பிரிவின்படி, ரயிலின் மேற்கூரை பகுதியில் ஏறுவது, படிகளில் தொங்கியபடி பயணம் செய்வது போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது. ரயிலின் படியில் தொங்கியப்படி பயணம் செய்தால், மூன்று மாதங்கள் சிறை அல்லது 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ரயில் பாதையில் அல்லது ரயில் இன்ஜின் அருகே சென்று, ‘செல்பி’ எடுத்தால், 2,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
ரயில்வே பாதுகாப்பு படை சார்பில், தொடர்ந்து ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தினமும் 10 பேர் வரை பிடிபட்டு, அபராதம் விதிக்கப்படுகிறது. பயணியர் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள, ரயில்வே சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.