சேலம் ஜவ்வரிசிக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. இதனால் சேலம் ஜவ்வரிசி உலக அளவில் பிரபலமாகும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சந்தையில் விற்பனையில் உள்ள பாரம்பரியமிக்க பொருட்களின் உள்நாட்டு மற்றும் பன்னாட்டுச் சந்தை விற்பனையை அதிகரிப்பதும் மற்றும் பாரம்பரிய பொருட்களைப் போல போலிகள் உருவாவதை கட்டுப்படுத்துவதும்தான் புவிசார் குறியீடு வழங்குவதன் நோக்கமாகும். ஓரிடத்தில் விளையக்கூடிய பொருள்கள் அல்லது தயாரிக்கக்கூடிய பொருட்களின் தரம், அந்த இடத்தின் காலநிலை, புவியியல் பகுதி, தனித்துவத் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் புவிசாா் குறியீடு வழங்கப்படுகிறது.
புவிசார் குறியீட்டிற்காக உருவாக்கப்பட்ட இந்தியாவின் ‘பொருள்கள் புவிசாா் குறியீடுகள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 1999’ என்ற சட்டம் 2003-ஆம் ஆண்டு செப்டம்பா் 15-ஆம் தேதி முதல் நடைமுறையில் உள்ளது. இந்தக் குறியீடு அளிக்கப்பட்ட பொருள்களை வேறு யாரும் அதே பெயரில் விற்பனை செய்ய முடியாது. இந்தக் குறியீடு 10 ஆண்டுகளுக்கு செல்லும். அதன் பிறகு புவிசார் குறியீடை புதுப்பித்துக் கொள்ளலாம்.
இந்நிலையில் சேலம் சேகோவுக்கான புவியியல் குறியீடு சான்றிதழ், உணவுப் பொருள் வகைப்பாட்டு பிரிவு 30ன் கீழ் பெறப்பட்டுள்ளது. பழனி பஞ்சாமிர்தம், சேலம் வெண்பட்டு. சேலம் மல்கோவா மாம்பழம் மற்றும் திருப்பதி லட்டு போன்ற பிரபலமான தயாரிப்புகளுடன் சேலம் சேகோவும் தற்போது இணைந்துள்ளது.
சேலம் சேகோசர்வ் தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழில் கூட்டுறவு சங்கமாகும். இந்த சேகோ சர்வில் 374 உறுப்பினர்கள் உள்ளார்கள். இந்தியாவிலேயே ஜவ்வரிசிக்கு என்று ஒரே ஒரு விற்பனை நிலையமாக சேகோசர்வ் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் கொண்டு வரப்படும் ஜவ்வரிசி, ஒரு பாரம்பரியமிக்க உணவு பொருளாகும்.
புவிசார் குறியீடு பெற்றதின் மூலம் ஜவ்வரிசிக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதனால் மரவள்ளிக்கிழங்கு பயிரிடும் அனைத்து விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும். ஜவ்வரிசி மற்றும் மரவள்ளிக்கிழங்கு மாவிலிருந்து தயாரிக்கப்படும் பல்வேறு வகையான மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களின் மதிப்பும் அதிகரிக்கும். மேலும் ஜவ்வரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அதிகளவில் வாய்ப்பு உள்ளது.
இதனால் இந்திய பொருளாதாரமும் மற்றும் உலக பொருளாதாரமும் மேம்படும் நிலை ஏற்படும். இதற்கான சான்றிதழ் பெறும் விழா சேகோசர்வ் சங்கத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு அரசு புவிசார் குறியீடு பதிவு பெற்ற பொருட்களின் நோடல் அலுவலர் சஞ்சய் காந்தி புவிசார் குறியீடு சான்றிதழை வழங்கினார்.
சேகோ சார்வ் செயல் இயக்குனர் லலித் ஆதித்ய நீலம், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் சிவக்குமார், தோட்டக்கலை இயக்குநர், சேகோ சர்வ் சங்க உறுப்பினர்கள், வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
