விஜய் நடித்துள்ள தி கோட் படத்தின் சிறப்புக் காட்சியை நாளை ஒருநாள் மட்டும் திரையிட்டுக்கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால், சிறப்புக் காட்சிக்காக காத்திருந்த லட்சக்கணக்கான ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்துள்ள தி கோட் திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்துக்கான அட்வான்ஸ் புக்கிங் தொடங்கப்பட்டு திரையரங்குகளில் முதல் நாள் காட்சிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.
4 காட்சிகளுக்கு ஏற்கெனவே அனுமதி இருந்த நிலையில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்படுமா எனும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. சிறப்புக் காட்சிக்கான அனுமதி கோரி இப்படத்தைத் தயாரித்துள்ள ஏஜிஎஸ் நிறுவனம் சார்பாக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாளை ஒருநாள் மட்டும் கூடுதலாக ஒரு காட்சியுடன் 5 காட்சிகள் திரையிட்டுக் கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாளை காலை 9 மணியிலிருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்குள்ளாக 5 காட்சிகளையும் முடித்துவிட வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு காட்சி முடிந்த பின்னும் திரையரங்குகளை சுத்தம் செய்ய போதிய கால அவகாசம் இருக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், சிறப்புக் காட்சிக்காக காத்திருந்த விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், நாளை முதல் 8 ஆம் தேதி வரை தினசரி 5 காட்சிகளுக்கு திரையிட அனைத்து திரையரங்கிற்கும் புதுச்சேரி அரசு அனுமதி அளித்துள்ளது.மேலும், முதல் 2 காட்சிகளுக்கு 50 விழுக்காடு டிக்கெட்டுகள் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.