வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு மணி மற்றும் சுடுமண் பதக்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் மேட்டுகாடு பகுதியில் 3-ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. இதுவரை அகழாய்வில் தங்க நாணயங்கள், சங்கினால் செய்யப்பட்ட பதக்கங்கள், அகேட் வகை அணிகலன்கள், செப்புக் காசுகள், உடைந்த சூடு மண் உருவ பொம்மைகள், சதுரங்க ஆட்ட காய்கள், கண்ணாடி மணிகள், வட்ட சில்லுகள் மற்றும் சங்கு வளையல்கள் போன்ற பல தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 2.04 மீட்டர் ஆழத்தில் ‘தங்கத்தால் செய்யப்பட்ட மணி’ ஒன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மணி 6 மி.மீ சுற்றளவையும், 4.7 மி.மீ கணத்தையும், 22 மி.கிராம் எடையையும் கொண்டதாக அமைந்துள்ளது. இதுவரை வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தால் செய்யப்பட்ட 7 தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

