மியான்மரில் நேற்று 7.7 மற்றும் 6.4 ரிக்டர் அளவிலான இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதன் விளைவாக, மியான்மரின் 5 நகரங்களில் உள்ள கட்டிடங்கள் சேதமடைந்தன. கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்துள்ளதால், அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் வடக்கு தாய்லாந்து மற்றும் பாங்காக் வரை உணரப்பட்டன. நேற்று முதல் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உயிரிழப்புகள் 700 ஐ கடந்துவிட்டன. மியான்மரில் ராணுவ ஆட்சி நிலவுவதால் உறுதியான தகவல்களைப் பெறுவதிலும், பிற நாடுகள் உதவுவதிலும் சில தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.அதே நேரத்தில், தாய்லாந்து, பாங்காங்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. தற்போது வரை 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாங்காங் கட்டிடத்தில் சிக்கியுள்ள 70க்கும் மேற்பட்டவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தியா, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மர் மக்களுக்கு உதவுவதற்காக, சுமார் 15 டன் அளவிலான நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது. இதில் கூடாரங்கள், போர்வைகள், உணவுப் பொருட்கள், தண்ணீர் சுத்திகரிப்பான்கள், சுகாதார உபகரணங்கள், சோலார் விளக்குகள், ஜெனரேட்டர் செட்கள், அத்தியாவசிய மருந்துகள், ஆன்டிபயாடிக் மருந்துகள், கையுறைகள், பருத்தி துணிகள் மற்றும் சிறுநீர் பைகள் போன்றவை அடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

