தொழிலாளர்களுக்கு சராசரி மாதச் சம்பளம் வழங்கும் பட்டியலில் 50 ஆயிரத்திற்கும் குறைவாக சம்பளம் வழங்கி இந்தியா 65வது இடத்தில் உள்ளதாக உலக புள்ளி விபரங்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் இன்று மே 1 ஐ முன்னிட்டு உலக தொழிலாளர்கள் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தொழிலாளர்களுக்கு 8மணி நேர வேலை வேண்டி நடைபெற்ற போராட்டத்தின் வெற்றிக்கு கிடைத்த பலன் தான் உலக தொழிலாளர் தினம். காலங்கள் மாறினாலும், இயந்திரங்களின் வருகை, தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவற்றினால் தொழிலாளர்கள் புதிய புதிய நெருக்கடிகளையும் சந்தித்து வருகின்றனர்.
இந்தியா போன்ற மிகப்பெரிய மனித வளங்களும், இளைஞர்களும் இருக்கும் ஒரு நாட்டில் தொழிலாளர்கள் வேலை நேரம், உழைப்பு சுரண்டல், வேலை பாதுகாப்பின்மை, ஓய்வூதியம், போன்ற பல நெருக்கடிகளை சந்திப்பதாக தொழிலாளர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தொழிலாளர் தினத்தில் உலக அளவில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சராசரி மாத சம்பளம் குறித்த புள்ளி விபரங்களை ”வேர்ல்ட் ஸ்டாட்டிஸ்டிக்ஸ்” நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி 40க்கும் மேற்ப்பட்ட நாடுகளின் பட்டியலை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
”வேர்ல்ட் ஸ்டாட்டிஸ்டிக்ஸ்” நிறுவனம் வெளியிட்ட தரவுகளின்படி, உலக அளவில் உள்ள 23 நாடுகளில் சராசரி மாதச் சம்பளம் ₹ 1 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. அதிக சம்பளம் வழங்கும் முதல் 10 நாடுகளில் சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க், சிங்கப்பூர், அமெரிக்கா, ஐஸ்லாந்து, கத்தார், டென்மார்க், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவின் சராசரி மாதச் சம்பளம் 50 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக உள்ளது. சராசரி மாதச் சம்பளம் வழங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 65வது இடத்தில் உள்ளது. துருக்கி, பிரேசில், அர்ஜென்டினா, இந்தோனேசியா, கொலம்பியா, பங்களாதேஷ், வெனிசுலா, நைஜீரியா, எகிப்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்தியாவை விட குறைவாக சராசரி மாத சம்பளம் வழங்கும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.