அமெரிக்காவில், சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை தனி விமானம் மூலம் நாடு கடத்தியுள்ளது அமெரிக்கா அரசு . அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிய நிலையில், இந்த நடவடிக்கை பெரும் விவாதத்திற்கு மாறியுள்ளது. இதற்கிடையில், இந்திய அரசின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அந்நாட்டு உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான நல்லுறவு பல ஆண்டுகளாக நிலவுகிறது, இதனால் வேலை மற்றும் கல்விக்காக இந்தியர்கள் அமெரிக்காவுக்குச் செல்லும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஐடி துறையில் வேலை செய்யும் இந்தியர்கள் அமெரிக்கா நோக்கி அதிகமாக செல்கின்றனர், இதனால் அமெரிக்க மக்கள்தொகையில் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. கல்லூரியில் படிக்கச் செல்வதாகக் கூறி மாணவர் விசா பெற்று அமெரிக்கா சென்ற சிலர் அங்கு வேலை செய்யத் தொடங்குகிறார்கள். இதற்கிடையில், அண்டை நாடுகளில் இருந்து ஆபத்தான முறையில் சட்டவிரோதமாக பலர் அமெரிக்காவுக்குள் நுழைகிறார்கள். சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைவோரைத் தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான ஒரு எடுத்துக்காட்டாக, அங்கு சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் தற்போது தனி விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்திய அரசின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், கடந்த அக்டோபர் 22ஆம் தேதி அவர்கள் இந்தியா அனுப்பப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத் துறையால் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், “அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கும் இந்தியர்கள் நாடு கடத்தப்படுவார்கள். அமெரிக்கா தனது சட்டங்களை கடைப்பிடித்து செயல்படும். சட்டத்திற்குப் புறம்பாக நுழைவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அமெரிக்காவுக்குள் நுழைய சட்டப்பூர்வமான வழிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைவோரைத் தடுக்கும் நோக்கில் கடந்த ஜூன் மாதம் புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதன் விளைவாக, அமெரிக்காவின் தென்மேற்கு எல்லை வழியாக சட்டவிரோதமாக நுழைந்தோரின் எண்ணிக்கை 55 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நடப்பு நிதியாண்டில், சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்த 145 நாடுகளைச் சேர்ந்த சுமார் 1.60 லட்சம் பேர் திருப்ப அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு திருப்ப அனுப்பப்படும் போது, சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு தேவையான தகவல்களை வழங்கப்படும் எனவும், சட்ட விரோதமாக அமெரிக்காவில் நுழைவோரைத் தடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வேலைவாய்ப்பு மற்றும் ஊதியம் அதிகமாக இருப்பதால், பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா செல்ல விரும்புகிறார்கள். ஆனால், அவர்களை தவறாக வழிநடத்தும் சில மோசடி கும்பல்கள் பணத்தை வாங்கி, தவறான வழிகளில் நாட்டில் நுழைய உதவுகின்றனர். இதனால், அந்நாட்டு அரசு மக்களை ஏமாறாமல் இருக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது.
