சூரிய ஒளியில் இயங்கும் இந்தியாவின் முதல் கிராமம் குஜராத்தின் மோதேரா – பிரதமர் மோடி அறிவிப்பு

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் செய்திமடல் மண்மணம்

குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள மோதேரா கிராமத்தை, இந்தியாவின் முதல் சூரிய சக்தி கிராமமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்தார். மோதேரா 24 மணி நேரமும் சூரிய சக்தி மின்சாரம் பெறும் கிராமம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இந்த கிராமத்தில் பிரபலமான சூரியன் கோயில் உள்ளது. இது 1026-27 காலகட்டத்தில் சாலுக்கிய வம்சத்தின் மன்னர் பீமன் என்பவரால் கட்டப்பட்டது.
இது தொடர்பாக குஜராத் அரசு வெளியிட்ட பதிவில், மோதேரா கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த கிராம மக்களுக்கு இலவசமாக சூரிய ஒளி மின்சாரம் வழங்கப்படும்.
இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை மனதில் வைத்து, குஜராத்தில் பல்வேறு நலத்திட்டங்களை நிலையான முறையில் செயல்படுத்துவதை உறுதி செய்துள்ளது.
தொல்லியல் துறையால் பாதுக்காப்படும் மோதேராவில் உள்ள சூரிய கோவிலுக்கு 3-டி தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சூரிய சக்தியில் இயங்கும் இந்த 3-டி திட்டத்தை பிரதமர் மோடி இன்று அர்ப்பணித்தார். இதன் மூலம் சூரிய கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதன் வரலாற்றை அறிய உதவும்.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, கோவில் வளாகத்தில் பாரம்பரிய விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. விளக்குகள் ஏற்றப்படுவதை பார்த்து, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் கோயிலுக்குச் செல்லலாம். 3-டி தொழில்நுட்பம் தினமும் மாலையில் இயக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக குஜராத் அரசு 12 ஹெக்டேர் நிலத்தை ஒதுக்கியது. இத்திட்டத்தின் வளர்ச்சிக்காக ரூ.80.66 கோடி செலவிடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி பேசுகையில், “மோதேரா இப்போது சூரியகிராமம் என்று அழைக்கப்படும். மோதேராவில் உள்ள மக்கள் சூரிய சக்தியைப் பயன்படுத்திய பிறகு மின்சாரக் கட்டணத்தில் 60 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சேமிப்பார்கள்.
இப்போது பொதுமக்கள் தங்கள் சொந்த மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இனி நாம் மின்சாரத்திற்கு பணம் செலுத்த மாட்டோம், ஆனால் அதை விற்று அதிலிருந்து சம்பாதிக்கலாம்” என்று பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *