உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டி; 8வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஜெர்மனி அணி

இந்தியா உலகம் ஐரோப்பா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழர் விளையாட்டு தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி விளையாட்டு

சென்னை: சென்னையில் அனல் பறக்க நடைபெற்ற ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை இறுதிப்போட்டியில், ஸ்பெயின் அணியை வீழ்த்தி ஜெர்மனி அணி சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டது. பெனால்டி ஷூட்-அவுட் வரை சென்ற இந்தப் பரபரப்பான ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம், 8-வது முறையாக உலகக் கோப்பையை வென்று ஜெர்மனி புதிய வரலாறு படைத்துள்ளது.
சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், 7 முறை சாம்பியனான ஜெர்மனியும், முதல் கோப்பையை வெல்ல துடிக்கும் ஸ்பெயினும் மோதின.
ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணிகளும் பாதுகாப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தின. ஆட்டத்தின் 26-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் ஜஸ்டஸ் வார்வெக் ஒரு அற்புதமான கோல் அடித்து தனது அணிக்கு 1-0 என முன்னிலை தேடித்தந்தார்.
ஆனால், இரண்டாவது பாதி தொடங்கியவுடனேயே ஸ்பெயின் பதிலடி கொடுத்தது. 33-வது நிமிடத்தில் நிக்கோலஸ் முஸ்டாரோஸ் கோல் அடிக்க, ஆட்டம் 1-1 எனச் சமனானது.
அதன்பிறகு இரு அணிகளும் கோல் அடிக்கக் கடுமையாகப் போராடியும், தடுப்புச் சுவர்கள் பலமாக இருந்ததால் ஆட்ட நேர முடிவில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
வெற்றியாளரைத் தீர்மானிக்கப் போட்டி ‘பெனால்டி ஷூட்-அவுட்’ முறைக்குச் சென்றது. இங்கும் பரபரப்புக்கு பஞ்சமில்லை. ஜெர்மனி அணியின் கோல்கீப்பர் ஜாஸ்பர் டிட்சர் மீண்டும் ஒருமுறை ஹீரோவாக ஜொலித்தார். காலிறுதியில் பிரான்ஸ் அணியை வீட்டுக்கு அனுப்பிய அதே வேகத்துடன், இறுதிப்போட்டியிலும் ஸ்பெயின் வீரர்களின் கோல் முயற்சிகளைத் தடுத்து நிறுத்தினார்.
இறுதியில் ஷூட்-அவுட்டில் 3-2 என்ற கணக்கில் ஜெர்மனி அணி த்ரில் வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பையை வென்றது. இந்த வெற்றியின் மூலம் ஜூனியர் ஹாக்கி வரலாற்றில் அதிக முறை (8 முறை) உலகக் கோப்பையை வென்ற அணி என்ற தனது சாதனையை ஜெர்மனி தக்க வைத்தது.
மறுபுறம், முதல்முறையாக உலகக் கோப்பையை வெல்லும் ஸ்பெயின் அணியின் கனவு நூலிழையில் தகர்ந்தது. முன்னதாக நடந்த 3-வது இடத்திற்கான போட்டியில் இந்திய அணி அர்ஜென்டினாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *