கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை ஓய்ந்த நிலையில் கடைசி நாளான இன்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கன்னிங்காம் சாலையில் உள்ள காஃபி ஷாப் ஒன்றுக்குச் சென்ற ராகுல் காந்தி, அங்கிருந்து வெளியே வந்து அருகில் உள்ள பேருந்து நிலையத்திற்குச் சென்றார். அங்கு பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களுடன் உரையாடினார். அதனைத்தொடர்ந்து, அவர்களோடு அரசு பேருந்திலும் பயணித்தார். அங்கிருந்தவர்களில் சிலர் ராகுல் காந்தியுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
முன்னதாக விஜயநகர் பகுதியில், வேனில் பயணித்தவாறு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாக்கு சேகரித்தார். அப்போது அவரது வாகனம் மீது மலர்களை தூவி காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் எத்தனை இடங்களை பிடிக்கும் என தன்னால் சொல்ல முடியாது என்றும் கர்நாடக மக்கள், ஊழலுக்கு முடிவு கட்டுவார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் விஜயநகர் பகுதியில் பிரியங்கா காந்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நாளை மறுநாள் நடைபெறவுள்ள தேர்தலில் 5,21,73,079 பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். 58,282 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. கர்நாடக சட்டமன்றத்துக்கு வரும் 10ஆம் தேதி வாக்குப்பதிவும், 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், இன்று மாலை 6 மணியுடன் பரப்புரை ஓய்ந்தது.
