திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம்.

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் கோயில்கள் சித்தர்கள் சிறப்பு செய்திகள் தமிழ்நாடு

திருவண்ணாமலையில் 2,668 அடி உயரத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை உச்சியில், பக்தர்களின் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற முழக்கத்துடன் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலையின் சிறப்பு கார்த்திகைத் தீபத் திருவிழா ஆகும், இது உலகளாவிய அளவில் பிரசித்தி பெற்றது. முக்கிய நிகழ்வாக, கார்த்திகைத் தீபத் திருவிழா இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. மூலவர் சந்நிதியில் அதிகாலை 4 மணியளவில், வேத மந்திரங்களை முழங்கிய சிவாச்சாரியார்கள் பரணி தீபத்தை ஏற்றினர். இறைவன், ஏகன் மற்றும் அநேகன் தத்துவத்தை உலகிற்கு எடுத்துரைத்து, பஞ்சபூதங்களும் நானே என்பதை உணர்த்துகிறார். பின்னர், கோயிலில் உள்ள பிரம்மதீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதற்குப் பிறகு, தங்கக் கொடி மரம் முன்னிலையில் உள்ள தீப தரிசன மண்டபத்தில் மாலை 4 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். அதன் பின்னர், ஆண் – பெண் சமம் என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்த, உமையவளுக்கு இடபாகத்தை அளித்து, ‘அர்த்தநாரீஸ்வரர்’ வடிவில் அண்ணாமலையார் எழுந்தருளினார். இறைவன் ஆனந்த தாண்டவம் ஆடி, பக்தர்கள் பக்தி பரவசத்தில் ஆழ்ந்தனர். பின்னர், தங்கக் கொடி மரம் முன்னிலையிலுள்ள அகண்டத்தில் தீபச்சுடர் ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மலையே மகேசன் என போற்றப்படும் 2,668 அடி உயரமான திருவண்ணாமலையின் உச்சியில் பருவதராஜ குல வம்சத்தினர் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றினர். ஜோதியாக காட்சி கொடுத்த அண்ணாமலையாரை அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தர்கள் மகிழ்ச்சியுடன் வணங்கினர். மேலும், 14 கி.மீ. திருவண்ணாமலையை அதிகாலை முதல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. விடிய விடிய 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *