பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் உட்பட முக்கிய அமெரிக்க அரசு உயர் பொறுப்பில் இருப்பவர்களை சந்திக்க உள்ளார். அதனை தொடர்ந்து, பன்னாட்டு தொழிலதிபரும், அமெரிக்காவின் அரசு செயல்துறையான DOGE அமைப்பை வழிநடத்தும் எலான் மஸ்க் யை பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பு, வாஷிங்டன் பிளேர் ஹவுஸில் நடைபெற்ற நிலையில் எலான் மஸ்க் தனது 3 குழந்தைகளுடன் பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பில் மஸ்கின் நியுராலிங் நிறுவன மூத்த அதிகாரி ஷிவோன் ஜிலிஸும் உடன் இருந்தார். இதில், மஸ்கின் டெஸ்லா நிறுவனத்தை இந்தியாவில் விரிவுபடுத்துவது, தொழில்நுட்பம் , தனது ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி துறை மற்றும் இந்தியாவில் அதிகரித்து வரும் விண்வெளி சார்ந்த ஆய்வுகள் குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இச்சந்திப்பின் போது, எலான் மஸ்க் மற்றும் பிரதமர் மோடி பரிசுகளை பரிமாறிக்கொண்டனர். எலான் மஸ்க் பிரதமர் மோடிக்கு வழங்கிய நினைவு பரிசில் ‘விண்வெளி நினைவு பரிசு’ என தகவல்கள் கூறுகின்றன. அந்த நினைவு பரிசில் , STARSHIP FLIGHT TEST 5 : OCTOBER 13, 2024 என எழுதப்பட்டுள்ளது. அதேபோல, பிரதமர் மோடி, எலான் மஸ்க் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு புத்தகங்களை பரிசாக அளித்தார். அந்த புத்தக தொகுப்பில் ரவீந்திரநாத் தாகூரின் தி கிரசண்ட் மூன், தி கிரேட் ஆர்.கே. நாராயண் கலெக்ஷன் மற்றும் பண்டிட் விஷ்ணு சர்மாவின் பஞ்சதந்திர கதைகள் ஆகிய புத்தகங்கள் இடம்பெற்று இருந்தன என தகவல்கள் கூறுகின்றன.
