சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களை இரண்டாம் கட்டமாக அந்நாடு வெளியேற்றுகிறது. இதில், மொத்தம் 119 பேர் நாடு கடத்தப்படவுள்ளனர்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றதும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களைக் கண்டறிந்து, அந்தந்த நாட்டிற்கு நாடு கடத்திவருகிறார்.
அதன்படி, கடந்த வாரம் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்கள், அந்நாட்டின் ராணுவ விமானமான சி19 மூலம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில், ஹரியானா மற்றும் குஜராத்தைச் சேர்ந்த தலா 33 நபர்களும், பஞ்சாப்பில் இருந்து 30 பேரும், மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தலா 3 பேரும், சண்டிகரைச் சேர்ந்த இருவரும் இருந்தனர்.
அவர்கள் அனைவரும் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பி அனுப்பப்பட்டபோது, அவர்களின் கை மற்றும் கால்களில் விலங்கிடப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.
எதிர்க் கட்சிகள் இந்த விவகாரத்தை நாடாளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் அது குறித்து விளக்கம் அளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துவது புதிதல்ல. கடந்த 2009ம் ஆண்டில் இருந்தே இந்த நடைமுறை இருந்துவருகிறது. சட்டவிரோதமாக குடியேறிய அனைத்து நாட்டினரையும் அமெரிக்கா வெளியேற்றி வருகிறது. அப்படி அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்படுபவர்களுக்கு விலங்கு போடும் நடைமுறை 2012ம் ஆண்டு முதல் அங்கு அமலில் உள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு விலங்கு போடமாட்டார்கள்.
நாடு கடத்தப்படும் இந்தியர்களை தவறாக நடத்தாமல் இருப்பதை உறுதி செய்ய அமெரிக்காவிடம் பேசி வருகிறோம். நாடு கடத்தப்பட்டவர்கள் அளிக்கும் தகவலின்படி, அவர்களை அனுப்பிய முகவர்கள், நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், இரண்டாம் கட்டமாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள 119 இந்தியர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர். இவர்கள் அனைவரும் அமெரிக்க ராணுவ விமானம் மூலம் இந்தியாவிற்கு அனுப்பப்படவுள்ளனர். அந்த விமானம் நாளை (15ம் தேதி) இரவு 10 மணிக்கு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கும் என சொல்லப்படுகிறது.
இதில், பஞ்சாப்பைச் சேர்ந்த 67 நபர்கள், ஹரியானாவைச் சேர்ந்த 33 பேர், குஜராத்தைச் சேர்ந்த 8 பேர், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மூவர், கோவா, ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த தலா இருவர், ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த தலா ஒருவர் உள்ளிட்ட 119 பேர் உள்ளனர்.
இந்த 119 நபர்களைத் தொடர்ந்து அடுத்த விமானம் வரும் 16ம் தேதி வரவிருக்கிறதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதேசமயம், சட்டவிரோத குடியேறிகளை இந்தியாவுக்கு கடத்தும் அமெரிக்க ராணுவ விமானம் பஞ்சாப் மாநிலத்தில் தரையிறங்குவது குறித்து பஞ்சாப்பைச் சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
பஞ்சாப் மாநில நிதி அமைச்சர் ஹர்பல் சிங் சீமா, “மத்திய பாஜக அரசு பஞ்சாப்பை அவமதிக்க நினைக்கிறது. ஏன் குஜராத், ஹரியானா அல்லது டெல்லியில் எல்லாம் விமானம் இறங்க இடம் இல்லையா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
