தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு தலைமை யார் என்ற கேள்வி தொடரும் நிலையில், தாங்கள் தான் கூட்டணிக்குத் தலைமை வகிக்கிறோம் என்று மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் கலந்துகொண்ட நிலையில், சாகேத் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 330 இடங்களில் வெற்றிபெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைதுசெய்த நிலையில், பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியுள்ளதாக தெரிவித்தார். எனவே, ஊழலைப் பற்றி பேச திமுக-வுக்கு தகுதியில்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
திமுகவின் பி டீமாக ஓ.பன்னீர்செல்வம் செயல்படுவதாகவும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
