ஃபாஸ்ட் டேக்கில் பிப்ரவரி 17 முதல் அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள்.

இந்தியா சிறப்பு செய்திகள் தமிழ்நாடு முதன்மை செய்தி

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகனங்களுக்கான சுங்கக்கட்டணம் ஃபாஸ்ட் டேக் முறையில் வசூலிக்கப்படுகிறது. தற்போது, இந்த முறையில் சில முக்கிய மாற்றங்கள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ஃபாஸ்ட் டேக் பரிவர்த்தனைகள் இனி சுங்கச்சாவடியில் டேக் ஸ்கேன் செய்யப்படும் நேரத்தை அடிப்படையாகக் கொண்டு சரிபார்க்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சுங்கச் சாவடியை அடைவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு உங்கள் ஃபாஸ்ட் டேக் பிளாக் லிஸ்ட் அல்லது ஹாட் லிஸ்டில் இருந்தால் அல்லது குறைந்த அளவிலான இருப்பு இருந்தால், பரிவர்த்தனை நிராகரிக்கப்படும். இதனால், சுங்கச் சாவடி வருவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பே உங்கள் ஃபாஸ்ட் டேக்கில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், பரிவர்த்தனை தானாகவே ரத்து செய்யப்படும். ஃபாஸ்ட் டேக் ஒயிட் லிஸ்ட் மற்றும் பிளாக் லிஸ்ட் என வகைப்படுத்தப்படும். ஒயிட் லிஸ்ட் என்பது செயல்பாட்டில் உள்ள ஃபாஸ்ட் டேக்குகளை குறிக்கிறது. போதுமான இருப்பு இல்லாதது, கேஒய்சி செயல்முறையை முடிக்காதது, சரிபார்ப்பு செயல்முறை நிலுவையில் இருப்பது மற்றும் வாகன பதிவு விவரங்களில் முரண்பாடுகள் இருந்தால், அந்த ஃபாஸ்ட் டேக்குகள் பிளாக் லிஸ்டில் சேர்க்கப்படலாம். ஸ்கேன் செய்யப்பட்ட 10 நிமிடங்களுக்குப் பிறகு, ஃபாஸ்ட் டேக் ப்ளாக்லிஸ்ட் செய்யப்பட்டால் அல்லது செயலற்ற நிலையில் இருந்தால், பரிவர்த்தனை நிராகரிக்கப்படும். மேலும், ஃபாஸ்ட் டேக் இந்த இரண்டு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்தால், “எர்ரர் கோட் 176” என்ற குறியீட்டுடன் பரிவர்த்தனை மறுக்கப்படும். இதற்குப் பிறகு, வாகனத்திற்கு அபராதமாக 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *