கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கடன் வழங்கும் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
பிரதமர் மோடியின் 73 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாஜகவினர் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிலையில் டெல்லி துவார்கா பகுதியில் 4 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள யஷோபூமி கட்டடத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க டெல்லி விமான நிலைய மெட்ரோ ரயிலில் மோடி பயணித்தார்.
குறிப்பிட்ட இந்த மெட்ரோ ரயில் சேவை துவாரகா பகுதியில் உள்ள செக்டார் 25 வரை வழித்தட நீட்டிப்பு செய்யப்பட்டது. நீட்டிக்கப்பட்ட மெட்ரோ வழித்தடத்தில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்த மோடியுடன் பொதுமக்கள் கலந்துரையாடினர். பிரதமர் மோடிக்கு அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து கூறியதுடன், பிரதமருடன் செல்பியும் எடுத்துக்கொண்டனர், பின்னர் புதிய மெட்ரோ ரயில் வழித்தடத்தின் கல்வெட்டுகளை பிரதமர் திறந்துவைத்தார்.
இதன் தொடர்ச்சியாக துவாரகா பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு விஸ்வகர்மா திட்டத்தை தொடங்கி வைத்தார். யஷோ பூமி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த விஸ்வகர்மா சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில், கைவினை கலைஞர்களுடன் பிரதமர் மோடி பேசினார். காலணிகள், மண்பாண்டம் செய்யும் கைவினைஞர்களுடனும் பிரதமர் கலந்துரையாடினார்.
