காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டுவரவும், பணயக்கைதிகளை விடுவிக்கவும் வலியுறுத்தி டெல் அவிவில் பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலிய மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஹமாஸ் படைகளுக்கு எதிராக நெதன்யாகு அரசாங்கம் போர் ஆரம்பித்த 2023 ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பிறகு, இஸ்ரேலில் முன்னெடுக்கப்படும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் இதுவாகும். பாலஸ்தீன மக்கள் மீதான இராணுவ நடவடிக்கையை நிறுத்த அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் உச்சக்கட்ட ஒரு பொது வேலைநிறுத்தம் மற்றும் நாடு தழுவிய போராட்டங்கள், பேரணி நடைபெற்றது. போரை நிறுத்துங்கள், கடத்தப்பட்டவர்களை மீட்டு வரவேண்டும் என்பதே இஸ்ரேலிய மக்களின் முழக்கமாக இருந்தது. ஹமாஸ் படைகளால் விடுவிக்கப்பட்ட பணயக்கைதிகள் மற்றும் மாயமான குடும்பங்களுக்கான அமைப்பு ஒன்று ஞாயிறு அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளது. டெல் அவிவில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500,000 பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. வெறும் அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே இந்தப் போர் நீட்டிக்கப்பட்டு வருவதாக மக்கள் பலர் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். காஸாவை முழுமையாக கைப்பற்றும் திட்டத்திற்கு நெதன்யாகுவின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்த ஒரு வாரத்திற்கு பிறகு இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும், ஆர்ப்பாட்டக்காரர்கள் போக்குவரத்துத் தடை, போலிசாருடன் மோதல் மற்றும் வன்முறையில் ஈடுபட்டதாக கூறி 30க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

