நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாட்டுப்படகு மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கடுமையாக தாக்கி, அவர்களிடம் இருந்து வலை மற்றும் பிற மீன்பிடிக் கருவிகளை பறித்துச் சென்ற சம்பவம், நாகை மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேதாரண்யம் வட்டத்தில், கோடியக்கரையில் பல மீனவர்கள் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரின் நாட்டுப்படகில், அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த கண்ணன் மகன் ராஜ்குமார் (25), காளிமுத்து மகன் ராஜேந்திரன் (49), மற்றும் சென்னையைச் சேர்ந்த ம்னோகரன் மகன் நாகலிங்கம் (45) ஆகிய மூவரும் வெள்ளிக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு கோடியக்கரைக்கு தென் கிழக்கே 25 நாட்டிக்கல் மைல் தொலைவில் நடந்தது. அங்கு மீன் பிடித்து கொண்டிருந்தவர்கள் மீது இலங்கையைச் சேர்ந்த கடற் கொள்ளையர்கள், இரண்டு படகுகளில் வந்து, ஆறுபேர் கொண்ட குழுவாக தாக்குதல் நடத்தினர். இவர்களது படகில் ஏறி, மீனவர்களை இரும்புக் கம்பியால் தாக்கி, அரிவாளால் வெட்டினர். இதில், ராஜ்குமாருக்கு தலை மற்றும் கையில் வெட்டுக் காயம் ஏற்பட்டது, ராஜேந்திரனுக்கு தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது, மேலும் நாகலிங்கத்துக்கு உள்காயம் ஏற்பட்டுள்ளது.கடற்கொள்ளையர்கள் அரிவாளால் மீனவர்களை அச்சுறுத்திய பிறகு, அவர்கள் படகில் இருந்த 300 கிலோ வலைகளை வெட்டி எடுத்துச் சென்றனர். மேலும், படகில் இருந்த ஜிபிஎஸ் கருவி, செல்போன் மற்றும் பிற பொருட்களையும் பறித்துக் கொண்டனர். இதற்குப் பிறகு, இன்று காலை 7 மணிக்கு கோடியக்கரைக்கு மீனவர்கள் திரும்பினர். அவர்களை சக மீனவர்கள் மற்றும் உறவினர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர், அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவங்கள் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் நிலைய போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

