ஆந்திரப் பிரதேசத்தில் திருப்பதி லட்டு தயாரிப்பில் விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழுவை மாற்ற உத்தரவிட்டுள்ளது. முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி இருந்த காலத்தில், விலங்குகளின் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் அடங்கிய கலப்பட நெய்யை திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.இந்த வழக்கு இன்று (அக்.4) விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆந்திரப் பிரதேச அரசு அமைத்த சிறப்பு விசாரணைக் குழுவை உச்ச நீதிமன்றம் மாற்றி அமைக்க உத்தரவிட்டது. புதிய குழுவில் 2 சிபிஐ அதிகாரிகள், 2 ஆந்திரப் பிரதேச காவல்துறை அதிகாரிகள் மற்றும் 1 இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய பிரதிநிதி உள்ளனர் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது. மேலும், இந்த விசாரணைக் குழுவை சிபிஐ இயக்குநர் கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.விசாரணைக் குழு உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் அமைக்கப்பட வேண்டும் என மனுதாரர்களின் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதற்கிடையில், நீதிமன்றத்தை ‘அரசியலுக்கான களமாக’ பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்றும் இது ஒரு அரசியல் நாடகமாக மாறுவதை நாங்கள் விரும்பவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்,
