கடவுள்களை அரசியலின் இருந்து விலக்க வேண்டும்: உச்சநீதி மன்றம்

அரசியல் இந்தியா உலகம் சிறப்பு செய்திகள் முதன்மை செய்தி

கடவுள்களை அரசியலின் இருந்து விலக்க வேண்டும் என திருப்பதி லட்டு சர்ச்சை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி இருந்த காலத்தில், திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய் கலப்படமானது என தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். மீன் எண்ணெய் மற்றும் விலங்குகளின் கொழுப்பு போன்றவை கலந்த நெய் கொள்முதல் செய்யப்பட்டது. அந்த நெய்யை ஆய்வக பரிசோதனையில் ஆதாரங்கள் உறுதியாகி உள்ளதாக தற்போதைய ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் விவாதத்தை உருவாக்கிய நிலையில், திருப்பதி கோயிலில் பரிகார பூஜை நடைபெற்றது. கலப்பட நெய் வாங்கிய தொடர்பான விவகாரத்தில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ஜெகன் மோகன் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி, வரலாற்றாசிரியர் விக்ரம் சம்பத், ஆன்மிக சொற்பொழிவாளர் துஷ்யந்த் ஸ்ரீதர் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் இன்று (செப்.30) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர். ஆந்திரப் பிரதேச அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகியும், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வழக்கறிஞர் சித்தார்த் லுத்ராவும் ஆஜராகினர். லட்டு தயாரிப்பில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டது என்பதற்கான ஆதாரங்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேட்டனர். இதற்குப் பதில் அளித்த சித்தார்த் லுத்ரா, ‘இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்’ என தெரிவித்தார். இதற்கு நீதிபதி கவாய், “உடனடியாக இன்னும் விசாரணை முடியாத நிலையில், இது குறித்து ஏன் பத்திரிகைகளுக்கு தெரிவிக்க வேண்டும்? மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்” என்றார்.
நீதிபதி பி.ஆர்.கவாய், “அரசியல் சாசனப் பதவியில் வகிப்பவர்கள், கடவுள்களை அரசியலில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். இதனை நீதிமன்றம் எதிர்பார்க்கிறது. ஆந்திர அரசு, சிறப்பு விசாரணைக் குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது. முடிவு வரும் வரை காத்திருக்காமல் பத்திரிகைகளுக்குச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன ? என்று கேள்வி எழுப்பினார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *