தமிழ்நாடு உலகில் அதிக அளவு காலணி உற்பத்தி செய்யும் மாநிலமாக மாறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகின் ஐந்து முன்னணி காலணி உற்பத்தி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் விரைவில் ஆலைகளை நிறுவ திட்டமிட்டுள்ளன. இதற்கான முதலீடுகளில், தைவானின் ஹொங் ஃபு நிறுவனம் 1000 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளது, இதன் மூலம் 20,000 வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், தைவானை சேர்ந்த பவ் சென் நிறுவனம் 2,302 கோடி ரூபாய் முதலீடு செய்ய முன்வந்துள்ளது, இதன் மூலம் 20,000 வேலை வாய்ப்புகள் உருவாகும். முன்னணி ஷூ தயாரிப்பு நிறுவனமான ஃப்ரீட்ரெண்ட் 1000 கோடி ரூபாய் முதலீடு செய்து 15,000 வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. அதற்குப் பிறகு, JR One என்ற நிறுவனம் தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் உற்பத்தி ஆலைகளை அமைக்க 5000 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளது, இதன் மூலம் 50,000 வேலை வாய்ப்புகள் உருவாகும். தமிழ்நாட்டின் பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள பெரம்பலூர், அரியலூர், திண்டிவனம் மற்றும் ராணிப்பேட்டை பகுதிகளில் புதிய உற்பத்தி ஆலைகள் அமைக்கப்படவுள்ளன. இந்த நிறுவனங்களுக்கு அரசு நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், விரைவில் பெரும் அளவிலான வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, இந்தியாவின் மொத்த காலணி உற்பத்தியில் தமிழ்நாடு 32 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. இங்கு அமைக்கப்படும் ஆலைகள் உற்பத்தியை தொடங்கினால், தமிழ்நாடு உலகளாவிய காலணி உற்பத்தியில் முன்னணி மாநிலமாக மாறும். தற்போது இந்தியாவில் ஏற்றுமதி செய்யப்படும் காலணிகளில் 50 சதவீதம் தமிழ்நாட்டில் இருந்து தயாரிக்கப்படுகிறது, மேலும் அடுத்த ஆண்டு இதன் அளவு மேலும் அதிகரிக்கும் என தகவல்கள் கூறுகின்றன.

