நீலகிரிக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வந்ததால், இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இன்று முதல் ஜூன் மாதம் இறுதி வரை சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நீலகிரிக்குள் வர புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டு அமலுக்கு வந்தது.
நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாகவும், கடந்த ஆண்டு மே 7-ந்தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி, நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டது.
ஏப்ரல் 1-ந்தேதி முதல் ஜூன் இறுதி வரை திங்கள் முதல் வெள்ளி கிழமை வரை ஒரு நாளுக்கு 6,000 சுற்றுலா வாகனங்களும், சனி மற்றும் ஞாயிறு நாட்களில் 8,000 சுற்றுலா வாகனங்களும் மட்டுமே நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் மேலும் ஒரு கட்டுப்பாட்டை கடந்த மாதம் விதித்தது. அதன்படி, இன்று நள்ளிரவு 12 மணி முதல் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கும் முறை அமலானது.

