அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கான ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்தியா, அமெரிக்காவுக்கு செல்லும் திறமையான தொழிலாளர்களுக்கு விசா பெறுவதில் எளிதாக்கங்களை செய்ய விரும்புகிறது. கடந்த ஆண்டில், இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் 118 பில்லியன் அமெரிக்க டாலரை அடைந்தது. இதற்கிடையில், இந்தியா அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இருப்பதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார், மேலும் இந்திய பொருட்களுக்கும் அதே அளவிலான வரி விதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதற்குப் பிறகு, அதிபர் ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடி விரைவில் சந்தித்து பேசுவதன் மூலம் வரி தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்றும், அமெரிக்க முதலீடுகளை ஈர்க்க இது உதவுமென வெளியுறவுத் துறை அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். அடுத்த மாதம் நடைபெறவுள்ள ட்ரம்ப் – மோடி சந்திப்புக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள இரு நாட்டு தூதரக அதிகாரிகள் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு உள்ளார். மார்கோ ரூபியோ அமெரிக்க வெளியுறவு அமைச்சராக பதவியேற்றதற்குப் பிறகு, ஒரு மணி நேரத்திற்குள் அவர் தனது முதல் இருதரப்பு சந்திப்பை எஸ். ஜெய்சங்கருடன் நடத்தினார். இந்த சந்திப்பு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது, இதில் இரு நாடுகளின் உறவுகள் குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்றன. சந்திப்பில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் குவாத்ரா உடனிருந்தார்.
