திருவண்ணாமலையில் உலகளாவிய புகழ் பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகக் கருதப்படுகிறது. இக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, மிகச் சிறப்பாக நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகாதீபம் கடந்த 13-ந்தேதி கோவிலின் பின்புற மலை உச்சியில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 11 நாட்கள் மகாதீபத்தை தரிசனம் செய்யும் நோக்கில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் தினந்தோறும் பெருமளவில் வருகை தந்தனர். சுமார் 2,668 அடி உயரத்தில் அமைந்துள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம், மழை மற்றும் கடுமையான காற்றின் மத்தியில், பக்தர்களுக்கு ஒரு பிரமாண்டமான காட்சியாக எரிந்து கொண்டிருந்தது. இந்நிலையில், மகாதீபம் ஏற்றப்பட்ட தீப கொப்பரை 11 நாட்களுக்கு பிறகு இன்று கீழே இறக்கி கொண்டு வரப்பட்டது. செங்குத்தான மலைப்பாதையில் தீப கொப்பரை இறக்கி கொண்டு வரப்பட்டன.

