வெளிநாட்டு இனத்தை சேர்ந்த 11 வகை நாய்களை இனப்பெருக்கம் செய்ய தடை விதித்தது தமிழக அரசு

இந்தியா சிறப்பு செய்திகள் தமிழ்நாடு முதன்மை செய்தி

தமிழக அரசு, வெளிநாட்டு இனத்தை சேர்ந்த 11 வகை நாய்களை இனப்பெருக்கம் செய்வதை தடை செய்வதற்கான விவரங்களை உள்ளடக்கிய நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பான கொள்கைக்கு ஒப்புதல் அளித்து, அரசாணை வெளியிட்டுள்ளது.சென்னை உயர்நீதிமன்றம் கடந்தாண்டு, தமிழ்நாட்டில் நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பான கொள்கையை உருவாக்குமாறு உத்தரவிட்டது. இதற்கான வரைவு அறிக்கையை கால்நடை பராமரிப்புத்துறை தயாரித்துள்ளது. இந்நிலையில், தமிழக அரசு இந்த கொள்கைக்கு ஒப்புதல் அளித்து, அரசாணையை வெளியிட்டுள்ளது. இதில், நாய்கள் இனப்பெருக்கம், வணிகம் மற்றும் விற்பனை ஆகியவை பெரும் அளவிலான வர்த்தகமாக நடைபெறுவதால், ஆயிரக்கணக்கானவர்கள் இந்த தொழிலில் ஈடுபடுவதாகவும், இதன் மூலம் கோடிக்கணக்கான தொகைக்கு விற்பனை நடைபெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டுப்பாடற்ற இனப்பெருக்கம் மனித இனத்திற்கு பல்வேறு சிக்கல்களை உருவாக்குகிறது. இதற்கான தீர்வாக இந்த கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. விலங்கு வதை தடுப்பு சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த கொள்கை, நெறி சார்ந்த இனப்பெருக்கத்தை ஊக்குவிக்கவும், கண்மூடித்தனமான இனப்பெருக்கத்தை தவிர்க்கவும், மரபியல் பிரச்சினைகளை உள்ளடக்கிய குட்டிகள் பிறப்பதை தடுக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது.மேலும்,இனப்பெருக்கம் நடைபெறும் இடங்களை பதிவு செய்யவும், இனப்பெருக்கம் செய்வோருக்கு உரிமம் வழங்கவும், நாய்களுக்கு சான்றிதழ் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இந்த கொள்கை முக்கியத்துவம் அளிக்கிறது. நாய் இனப்பெருக்க ஏஜென்சிகளை கண்காணிப்பதும் இதன் ஒரு பகுதியாகும்.தமிழகத்தின் நாட்டினங்களான ராஜபாளையம், கோம்பை, சிப்பிப்பாறை மற்றும் கன்னி ஆகிய இனங்களை அங்கீகரித்து, கட்டை, ராமநாதபுரம் மண்டை நாய், மலை பட்டி, செங்கோட்டை நாய் ஆகிய இனங்களுக்கு அங்கீகாரம் வழங்கி, அவற்றை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், பாசெட் ஹவுண்ட், பிரஞ்சு புல்டாக், அலாஸ்கன் மலாமுட், கீஷொண்ட், சோ சோ, நியூஃபவுண்ட்லாந்து, நார்வேக்லான் எல்கவுண்ட், திபெத்திய மாஸ்டிஃப், சைபீரியன் ஹஸ்கி, செயின்ட் பெர்னார்ட், பக் ஆகிய 11 நாய் இனங்கள் இந்திய தட்பவெப்ப சூழலுக்கு ஏற்படுவதற்கான திறனை கொண்டதாக இல்லை. எனவே, குளிர் பிரதேசங்களில் உள்ள நாய் இனங்களை வளர்ப்பதற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாய்கள் தொடர்பான தகவல்களை தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும். நாய்களின் உடல்நிலை குறித்த சான்றிதழ் விலங்குகள் நல வாரியத்தால் வழங்கப்படும். நாய்களின் உரிமையாளர்களின் விவரங்களை விலங்குகள் நல வாரியத்தில் அடிக்கடி புதுப்பிக்க வேண்டும். நாய் வளர்ப்பவர்கள், வளர்ப்பு முறைகள், உணவு, இனப்பெருக்கம் மற்றும் செயல்பாடு குறித்து அறிவு பெற்றிருக்க வேண்டும். நாய்களின் மனநிலை மற்றும் உடல்நிலை பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். வளர்ப்பு நாய்களின் உடல் நலனை கால்நடை மருத்துவர் மூலம் அடிக்கடி பரிசோதிக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *