கன்னியாகுமரியில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா காண்பதையொட்டி வரும் டிசம்பர் 31ம் தேதி மற்றும் ஜனவரி 1ம் தேதி ஆகிய இரண்டு நாட்களும் தமிழ்நாடு அரசு, 25வது ஆண்டு நிறைவு விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கொண்டாட இருக்கிறது. சிலை அமைக்கப்பட்டு கால் நூற்றாண்டு ஆகிறது. அதை கொண்டாடுகின்ற விதமாக டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய நாட்களில் வெள்ளிவிழா நிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது. திருவள்ளுவரின் திருவுருவச்சிலை அருகே 3டி லேசர் காட்சி ஏற்பாடு செய்யப்படும். இக்காட்சி தமிழ் இணைய கழக மையங்கள், தமிழ்ச் சங்கங்கள், தமிழ்நாடு இல்லம் ஆகியவற்றில் யூடியூப் மூலம் ஒளிபரப்பப்படும். வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு திருக்குறளின் பெருமைகள் குறித்த போட்டி நடத்தப்படும். அனைத்து மாவட்ட நூலகங்களிலும் திருவள்ளுவர் புகைப்படம் வைக்கப்பட்டு, திருக்குறள் பெருமை சொல்லும் நிகழ்ச்சிகள், திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தல் செய்யப்படும். திருக்குறள் விளக்க உரைகள் மற்றும் திருக்குறள் தொடர்பான புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். டிசம்பர் 25 முதல் 30 வரை மாவட்ட அளவில் கருத்தரங்கம், பேச்சரங்கம் நடத்தப்படும்.

