விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் தொழிற்சங்கங்கள் துவங்கப்படும் என அதன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்து தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம், கங்கணாங்குப்பம் பகுதியில் நடந்த ஆயுத பூஜை விழாவில் பங்கேற்ற விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்து ஆட்டோ தொழிலாளர்களுக்கு சீருடை மற்றும் இனிப்புகள் வழங்கினார். பின்னர் பேட்டியளித்த அவர், நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருவதாக தெரிவித்தார்.
தளபதி பயிலகம் என்ற பெயரில் பாடசாலைகள் அமைத்து ஏழை, எளிய மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதாக கூறிய அவர், விஜய்-ன் சொல்லுக்கு இணங்க மக்கள் சேவைகளை தொடர்ந்து செய்து கொண்டு இருப்போம் என்று தெரிவித்தார்.
ஏற்கனவே திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் விஜய் மக்கள் இயக்க தொழிற்சங்கங்கள் உள்ள நிலையில், பிற மாவட்டங்களிலும் விரைவில் தொழிற்சங்க அணிகள் துவங்கப்படும் என்று புஸ்ஸி ஆனந்து அறிவித்தார். இந்த ஆயுத பூஜை கொண்டாட்ட நிகழ்வில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.