தவெக தலைவர் நடிகர் விஜய் திருச்சியில் நாளை(13ம் தேதி) பிரச்சார சுற்றுப்பயணத்தை துவங்குகிறார். பிரச்சாரத்தில் கலந்து கொள்ள விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி செல்ல உள்ளார் .காலை 10.45 மணியளவில் மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களிடையே பேசவுள்ளார். பின்னர் அவர் சாலை மார்க்கமாக அரியலுார் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்கிறார். விஜய் தன் முதல் பிரச்சார பயணத்தை நாளை தொடங்கவுள்ள நிலையில், அவருக்கான பிரச்சார வாகனம் தயார் நிலையில் உள்ளது. பிரச்சார வாகனம் தவெக கட்சி நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. அதில் கட்சியின் கொடி இடம்பெற்றுள்ளது. மேலும், விஜய்யின் கொள்கை தலைவர்களான வேலுநாச்சியார், காமராஜர், பெரியார், அம்பேத்கர், அஞ்சலையம்மாள் ஆகியோருடன் விஜய் இருப்பது போல் படங்கள் உள்ளன. மேலும் அண்ணா, எம்ஜிஆருடன் விஜய் நிற்பது போன்ற படமும் உள்ளது. பிரச்சாரத்தில் விஜய் என்ன பேச போகிறார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் . மேலும் பிரச்சாரம் முடிந்த உடனே சென்னை புறப்பட்டு செல்கிறார் என தமிழக வெற்றி கழகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

