நாட்டையே உலுக்கிய கேரளா வயநாடு நிலச்சரிவு; 122 பேர் பலி, மீட்பு பணிகள் தீவிரம்

இந்தியா இயற்கை பேரிடர் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வானிலை விபத்துகள்

கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 120ஐ கடந்துள்ள நிலையில், சுமார் 400 குடும்பங்கள் சிக்கிக் கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கேரளா முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வயநாடு மாவட்டம் முண்டக்கை பகுதியில் நள்ளிரவு 1 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதற்கான மீட்பு பணி நடைபெற்று வந்த போதே, மேப்படி மற்றும் சூரல்மலையில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில், நிவாரண முகாமாக செயல்பட்ட பள்ளி, வீடுகள் மற்றும் கடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மேலும், சூரல்மலையில் உள்ள பாலம் ஒன்றும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. 4 மணிநேரத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலச்சரிவுகளால் சூரல்மலை கிராமத்தில் மட்டும் 200 வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
இரவில் தூங்கியபோதே வீடுகளுடன் ஏராளமானோர் புதையண்டனர். குறிப்பாக முண்டக்கை பகுதியில் வீடு மற்றும் கடைகள் இருந்ததற்கான சுவடுகளே தெரியாத அளவிற்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
முண்டக்கை பகுதியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நபர் ஒருவர், பாறைகளை பிடித்து கொண்டு உயிருக்கு போராடிய காணொலி வெளியானது.
இதே போன்று முண்டக்கை பகுதியில் இருந்து தப்பித்த சுமார் 250 பேர் மேடான பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தஞ்சம் அடைந்துள்ளனர். மலைச்சரிவில் இருந்த சுமார் 60 வீடுகள் மண்ணில் புதையுண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் அடித்து செல்லப்பட்டவர்களில் 6 பேர் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அட்டமா ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இதே போன்று பொதுக்கல் என்ற இடத்திலும் சடலங்கள் ஆற்றில் கரை ஒதுங்கின.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *