வேலூர் முருகன் சிலை
வேலூர் தீர்த்தகிரியில் அமைந்துள்ள உலகின் மூன்றாவது மிகப்பெரிய முருகர் சிலைக்கு கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மலேசியாவில் பத்துமலை, சேலத்தில் முத்துமலை வரிசையில் வேலூரில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மூன்றாவது மிகப் பெரிய முருகர் சிலைக்கு கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. வேலூர் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வெங்கடாபுரம் அடுத்த புது வசூர் தீர்த்தகிரி மலையில் அமைந்துள்ள பல நூறு ஆண்டுகள் பழமையான வடிவேல் சுப்பிரமணிய சாமி கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வந்தன.
இந்த கோயிலுக்கு முன்பாக 92 அடி உயரத்தில் பிரமாண்டமான முருகர் சிலை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இது உலகிலேயே உயரமான மூன்றாவது பெரிய முருகர் சிலையாகும். மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலையை வடிவமைத்த திருவாரூர் தியாகராஜன் ஸ்தபதி இந்த சிலையையும் வடிவமைத்துள்ளார். இந்நிலையில், வடிவேல் சுப்பிரமணிய சாமி கோயிலில் திருப்பணிகள் முடிந்து மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மூலவர் கோபுரம், பரிவார தேவதைகளுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட பின்னர் 92 அடி உயர முருகர் சிலைக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
பல்வேறு நதிகளில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித நீர் மற்றும் மலர்கள் டிரோன்கள் மூலம் எடுத்துச் சென்று 92 அடி உயர முருகர் சிலை மீது தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். அழகென்ற சொல்லுக்கு முருகா என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இந்த முருகர் சிலை முன்பு குடும்பத்துடன் பக்தர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். கும்பாபிஷேக விழாவில் அசம்பாவிதங்களை தவிர்க்க 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

