இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், தனது எக்ஸ் தளத்தில் வீடியோ மூலம் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
38 வயதான ஷிகர் தவான் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஆவார். 2010 ஆம் ஆண்டு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சர்வதேச அளவில் அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து, சிறப்பான ஆட்டத்தால் அவருக்கு டி20 மற்றும் டெஸ்ட் அணிகள் இரண்டிலும் இடம் கிடைத்தது. அவர் இந்தியாவுக்காக 167 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், 68 இருபது20 சர்வதேசப் போட்டிகள் மற்றும் 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ஐபிஎல்லில் தவான் கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக விளையாடினார், இதற்கு முன்பு டெல்லி, மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளில் விளையாடியுள்ளார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.
ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வந்த ஷிகர் தவான், கிரிக்கெட்டில் இருந்து முழு ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார். ஷிகர் தவானின் இந்த அறிவிப்பால் அவரது ஆதரவாளர்கள் பலர் அதிர்ச்சி அடைந்தனர்.
இடது கை பேட்ஸ்மேனான ஷிகர் தவான், வங்கதேசத்துக்கு எதிரான 2022 சர்வதேச ஒருநாள் தொடரில் இந்திய கிரிக்கெட் அணிக்காக தனது கடைசி ஆட்டத்தை விளையாடினார்.
மேலும் இந்திய அணிக்காக எந்த ஒரு போட்டியிலும் அவர் விளையாடவில்லை. அவர் ஒரு வீடியோவை வெளியிட்டார், அதில் அவர் தனது ஆதரவாளர்களுக்கு பல ஆண்டுகளாக தொடர்ந்து ஆதரவளித்ததற்கு நன்றி தெரிவித்தார்.