சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பரவிய கொரோனா தற்போது இந்தியாவில் மெதுவாக அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் படுக்கைகள், மருந்துகள், ஆக்சிஜன் வசதி உள்ளிட்டவைகளின் இருப்பை உறுதி செய்யும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. சீனா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளை கொரோனா தொற்று அச்சுறுத்திவரும் நிலையில், அதற்கு காரணம் 2 புதிய வகை கொரோனா மாறுபாடு வைரஸ்கள்தான் என உலக சுகாதார நிறுவனம் கண்டறிந்து தெரிவித்துள்ளது. அதன்படி, என்பி.1.8.1 மற்றும் எல்எஃப்.7 ஆகிய இரு உருமாறிய கொரோனா வைரஸ்களால் தான், தற்போது கொரோனா வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 வகை கொரோனாவும் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளன. கடந்த மாதம் தமிழ்நாட்டில் ஒருவருக்கு என்பி.1.8.1 (NB.1.8.1) வைரஸ் தொற்றும், குஜராத்தில் 4 பேருக்கு எல்எஃப்.7 (LF.7) வகை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளன. எனினும், இந்த மாறுபாடுகள் கண்காணிப்பில் உள்ளதாகவும், அவை அபாயகரமானவை என்று இதுவரை வரையறுக்கப்படவில்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ்களால், இதுவரை இந்தியாவில் 5 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

