கிரீன்லாந்தை விலைக்கு வாங்கும் தனது திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். டென்மார்க், பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 8 ஐரோப்பிய நாடுகளுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும், இந்த வரி பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், கிரீன்லாந்தை வாங்கும் ஒப்பந்தம் சுமுகமாக முடிவடையாவிட்டால், ஜூன் 1 முதல் அந்த வரி 25 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.கிரீன்லாந்து டென்மார்க் நாட்டின் தன்னாட்சி பெற்ற பகுதி ஆகும். இந்த பகுதி ஆர்க்டிக் பகுதியில் முக்கியமானதாக இருப்பதால், சீனா மற்றும் ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்ய கிரீன்லாந்து தேவை என்று ட்ரம்ப் கூறி வருகிறார். ஆனால் இந்த திட்டத்துக்கு டென்மார்க் அரசு மற்றும் கிரீன்லாந்து மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல என்றும், தங்கள் நாட்டை தாங்களே நிர்வகிப்போம் என்றும் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, பாதுகாப்பு காரணமாக கிரீன்லாந்தில் கூடுதல் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக டென்மார்க் தெரிவித்துள்ளது.

