சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் 3D-யில் கருவின் மூளை வளர்ச்சியை படம் பிடித்து சாதனை நிகழ்த்தியுள்ளனர். மனித மூளை, இயற்கையின் மிகுந்த சிக்கலான அமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது, இதன் செயல்பாடுகளை முழுமையாகப் புரிந்து கொள்ள விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இந்த முயற்சியில், ஆராய்ச்சியாளர்கள் மூளையை 5,132 பகுதிகளை முழுமையாகப் பகுப்பாய்வு செய்து, மூன்று பரிமாணங்களில் (3D யில்) ஒரு டிஜிட்டல் படமாக உருவாக்கியுள்ளனர். பல நாடுகளில் மூளை தொடர்பான ஆராய்ச்சிகள் நடைபெற்று வந்தாலும், வளர்ந்து வரும் கருவின் மூளையை இவ்வளவு துல்லியமாகப் படம் பிடித்தது இதுவரை நடந்ததில்லை. இந்த சாதனை, மூளை தொடர்பான பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும், புதிய சிகிச்சை முறைகளை உருவாக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆராய்ச்சி கருவில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சியைப் பற்றிய புதிய அணுகுமுறையை வழங்கும் எனவும். இதன் மூலம், மூளை தொடர்பான பிறவி குறைபாடுகளை அடையாளம் காணவும், அவற்றிற்கு சிகிச்சை அளிக்கவும் முடியும். அல்சைமர் மற்றும் பார்க்கின்சன் போன்ற மூளை நோய்களுக்கு புதிய சிகிச்சை முறைகளை கண்டறிய இந்த ஆராய்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது என பல அறிஞர்கள் கருதுகின்றனர். மேலும், நூறாண்டுகள் பழமையான நரம்பியல் அறிவியல் இதழான ஜர்னல் ஆஃப் கம்பேரிட்டிவ் நியூராலஜி, இந்த ஆராய்ச்சியின் முக்கிய கண்டுபிடிப்புகளை சிறப்பு இதழாக வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.