தஞ்சை பெரிய கோயிலில் மழைநீர் தேங்காமல் இருக்க தரைதளம் அமைக்கும் பணி; இந்திய தொல்லியல் துறை நடவடிக்கை

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் கோயில்கள் சுற்றுலா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலில் மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை சார்பில் தரைதளம் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. கோயில் கோபுரத்துக்கு அதிர்வு ஏற்படாதபடி தொழிலாளர்கள் உளி, சுத்தியலால், பழைய தரைதளத்தை அகற்றி வருகின்றனர். உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து, கோயிலில் உள்ள கல்வெட்டுகளையும், சிற்பங்களையும் பார்த்து வியந்து செல்கின்றனர்.
இந்நிலையில், கோயிலின் உள்பிரகாரத்தில் பல இடங்களிலும் மழைநீர் தேங்கியதால், சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல முடியாமலும், பாசி படர்ந்துள்ளதால் பல இடங்களில் வலுக்கி விழுந்து மக்கள் சிரமத்தை சந்தித்து வந்தனர். மேலும், சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் பிரகாரத்தில் பதிக்கப்பட்ட தட்டையான செங்கற்கள் தேய்ந்து, மேடு பள்ளமாக இருப்பதால், ஆங்காங்கே மழைநீர் தேங்கியது.இதையடுத்து இந்திய தொல்லியல் துறையினர் கோயில் பிரகாரத்தில் மழைநீர் தேங்கும் பகுதிகளில் ஒவ்வொரு கட்டமாக செங்கற்களை அகற்றிவிட்டு, அதே இடத்தில் மீண்டும் தட்டையான செங்கற்களை பதித்து, மழைநீர் தேங்காத வகையில், கட்டமைப்பை ஏற்படுத்தி வருகி்ன்றனர்.
அதன்படி கடந்த 2023-2024-ம் ஆண்டில் முதற்கட்டமாக கோயிலின் தென்புற பகுதியில் பழைய செங்கல் கற்கள் அகற்றப்பட்டு, புதிய கற்கள் பதிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து தற்போது கோயிலின் பின்புறம் கருவூர் சன்னதிக்கும் விநாயகர் சன்னதிக்கும் இடையே சுமார் 4 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் உள்ள பழைய கற்கள் அகற்றும் பணி தொடங்கியுள்ளது. இந்த கற்கள் அகற்றப்பட்டவுடன், புதிய தட்டையான செங்கல் கற்கள் அமைக்கப்படவுள்ளது. இது குறித்து இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியதாவது: தஞ்சாவூர் பெரிய கோயில் உள் பிரகாரத்தில் தட்டையான செங்கற்கள் கொண்டு தரைதளம் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த கற்கள் தேய்ந்து மேடு பள்ளமாக இருப்பதால் மழைநீர் ஆங்காங்கே தேங்கியது.
இதனால் பாசி படர்ந்து பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். இதையடுத்து தொல்லியல் துறையினர் பிரகாரத்தில் உள்ள கற்களை அகற்றிவிட்டு, அதற்கு பதில் தட்டையான செங்கல் கற்களை கொண்டு தரைதளம் அமைக்க முடிவு செய்தது.இதற்காக ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிக்காக பிரத்யோகமான தட்டையான செங்கல் கற்கள் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்திலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. தற்போது இரண்டாவது கட்டமாக பெரிய கோயில் பின்புறம் பழைய கற்கள் அகற்றப்படுகிறது. இதற்காக கோயிலுக்கு பாதிப்பு இல்லாத வகையிலும், அதிர்வு ஏற்படாத வகையிலும் உளி, சுத்தியல் கொண்டு தொழிலாளர்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் 4 மாதங்களில் இந்த பணிகள் நிறைவடையும். பின்னர் நந்தி மண்டபம் அருகே பணிகள் நடைபெறவுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *