இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலாத் தளமாக மாறும் அயோத்தியா நகரம்; அன்னிய முதலீடுகள் குவியும் ஆச்சரியம்

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் கோயில்கள் சுற்றுலா செய்திகள் திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா வரும் ஜனவரி 22-ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி இப்பகுதியில் ஆன்மீக சுற்றுலா சார்ந்த சேவைகளை மேம்படுத்தும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக தங்கும் விடுதிகள் சார்ந்து எண்ணற்ற முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்து வருகின்றனர். பாரம்பரிய மற்றும் பிரபலம் வாய்ந்த நிறுவனங்கள் இங்கு தங்கும் விடுதிகளை அமைத்து வருகின்றன. தற்போதைய சூழலில் சொகுசு வசதிகளுடன் கூடிய 50-க்கும் மேற்பட்ட விடுதிகள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து அயோத்தி மண்டல ஆணையர் கௌரவ தயாள் கூறுகையில், “உத்திரபிரதேச அரசு அண்மையில் நடத்திய உலக முதலீட்டாளர் மாநாட்டின் போது, அயோத்தியில் ஆன்மீகம் சார்ந்த சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் 102 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகின. இதன் மூலமாக ரூ.18,000 கோடி முதலீடு அயோத்தி நகருக்கு வருகிறது.
இது மட்டுமல்லாமல் எண்ணற்ற தொழில் முனைவோர்கள் ஆன்மீக சுற்றுலா சார்ந்து தங்கள் முதலீடு திட்டமிடல் குறித்து உத்தரப்பிரதேச அரசு மற்றும் அயோத்தி மாவட்ட நிர்வாகத்திடம் யோசனைகளை முன் வைத்திருக்கின்றனர்” என்று தெரிவித்தார். அயோத்தியில் 126 சுற்றுலா திட்டங்களை நிறைவு செய்யும் வகையில் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இதில் 46 திட்டங்கள் முறைப்படி ஒப்பந்தம் செய்யப்பட்டவை ஆகும் மற்றும் 80 திட்டங்கள் ஒப்பந்தம் செய்யப்படாத திட்டங்கள் ஆகும். இந்த சுற்றுலா திட்டங்களின் ஒட்டுமொத்த முதலீடு ரூ.4,000 கோடி ஆகும். இந்தியாவில் பிரபலம் வாய்ந்ததாக உள்ள தாஜ், மேரியாட், ஜிஞ்சர், ஓபராய், ட்ரைடன்ட் மற்றும் ரேடிசன் போன்ற நிறுவனங்கள் சார்பில் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன.
சுமார் 71 ஏக்கர் பரப்பளவில் அயோத்தி கோவில் வளாகம் அமைந்து வருகிறது. மொத்தம் ஆறு வளாகங்களாக கோவில் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் கோவிலில் மூலஸ்தானம் மற்றும் குக மண்டபம், ரங்க மண்டபம் உள்ளிட்டவை அடங்கும். கோவிலின் மொத்த உயரம் 161 அடியாகும். தலா 19.5 அடி என்ற அளவில் மூன்று தளங்கள் அமைந்துள்ளன.
அயோத்தி நகரை சுற்றியுள்ள ஹோட்டல்களில் முன்பதிவுகள் நடைபெற்று வருகின்றன. Booking.com என்ற தளத்தில் 20 ஹோட்டல்கள், 12 அடுக்குமாடி குடியிருப்புகள், 12 வீடுகள், 7 தங்குமிடங்கள், 6 விருந்தினர் இல்லங்கள் உள்ளிட்டவை முன்பதிவுக்காக பட்டியல் விடப்பட்டுள்ளன. இதில் கோவில் திறக்கப்படும் ஜனவரி 22 ஆம் தேதிக்கு முன்னதாக இரண்டு வாரங்களுக்கு உண்டான தேதிகளில் 77 சதவீத தங்குமிடங்கள் முழுமையாக புக்கிங் செய்யப்பட்டுள்ளன. தங்கும் விடுதிகளில் வழக்கமான கட்டணத்தை காட்டிலும் 200 சதவீதம் கூடுதலாக வசூலிக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *